கட்டுரை

வாக்குகளிலா இருக்கிறது போராளியின் வெற்றி?

பா. ஏகலைவன்

சமீபத்திய சட்டமன்றத்  தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் விஜயகாந்த் கூட்டணியாக நின்ற  ஆறு கட்சி மக்கள் நலக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது பெரும் அதிர்ச்சி. இக்கூட்டணியில் வெற்றிக்குப் பக்கத்தில் வந்ததும் திருமாவளவன் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மட்டும்தான். இப்படி இந்த கட்சிகளே துண்டைக்காணும் துணியைக் காணும் என்று சிதறிய தேர்தலில் தமிழருவி மணியன் தன் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் 36 இடங்களில் ஆட்களை விசில் சின்னம் வாங்கி இறக்கியது என்னவோ அவருக்குப் பிடித்த கெட்ட நேரம். எல்லா இடங்களிலும் மிகச் சொற்ப வாக்குகளை அவரது வேட்பாளர்கள் பெற்றார்கள். இதை அடுத்து அவர் விரக்தியின் உச்சத்திற்குப்போய் அறிக்கை விட்டார்.

“காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்தபடி இந்த முடிவை நான் மேற்கொண்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன். காந்திய மக்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை அதனுடைய நிர்வாகிகள் கூடி நிர்ணயம் செய்வார்கள்” என்றார்.

முப்பத்தியாறு இடங்களில் ஓர் இடத்திலாவது தமிழருவி மணியன் நிற்காமல் போனது ஏன்? சென்னைக்குள் நின்றிருந்தால் எப்படியும் இரண்டாயிரம் வாக்குகளை விட அதிகம்(!) வாங்கியிருப்பார். தோல்வி முன்கூட்டியே தெரிந்து வைகோ போல போட்டியிடாமலே விலகிவிட்டு ஏன் மக்களைக் குறை சொல்கிறார்?

அவரது கோபத்திற்கும், ஆற்றாமைக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவரை மட்டுமே மக்கள் புறக்கணித்து விட்டதாக நினைத்துக் கொண்டு ஆதங்கப்பட்டதுதான் யோசிக்கவைக்கிறது.

இந்த மக்கள் மீதும், அவர்களின் நலன்களின் மீதும் அக்கறை கொண்ட தமிழருவி மணியன் போன்றவர்களை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு குழப்பம் இருக்கின்றது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவேண்டுமானால் அரசியல் தனக்கு பொழுதுபோக்கு அல்ல; தேர்தலையொட்டி செய்வது அல்ல. தீவிரமாகத்தான் அதில் இருக்கிறேன் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டியிருக்கவேண்டும். அவரும் எதாவது ஒரு தொகுதியில் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோயிருக்கமுடியும். ஆட்டம் என்று களமிறங்கிவிட்டால் அதன் விதிகளுக்கு கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும் அய்யா?

தனிப்பட்ட முறையில் நல்லவர்கள் புறக்கணிப்படுவது அரசியல் அரங்கில் புறக்கணிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. உதாரணத்துக்கு நல்லக்கண்ணுவை எடுத்துக்கொள்வோம். 

அவர் போராடாத மக்கள் பிரச்சனையே இல்லை. இந்தியாவின் முதுபெரும் தலைவர்கள் எல்லாம் மதித்துப் போற்றக்கூடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல பதவிகளை ஏற்றிருந்தவர் என்பதைவிட, மக்களுக்காக பல போராட்டங்களையும் சிறைச்சாலைகளையும் கண்டவர் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

அப்படியானவருக்கு கட்சி தலைமை, தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தது. அவரும் நம்பி தொகுதியில் வேட்பாளராக நின்றார். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? யாருக்காக இவர் காலமெல்லாம் போராடிக் கொண்டிருந்தாரோ, அந்த உழைக்கும் மக்கள்தானே இவரை புறக்கணித்தார்கள். இன்றளவும் அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ வெற்றிபெற வைக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடா இல்லையா? அவரும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாச உறுப்பினர். அந்த கட்சி என்னதான் குழப்படி செய்தாலும் குற்றப்பின்னணி உடையவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளித்தாலும் வாய் திறக்காத விசுவாசி. சரி அவரை மக்கள்தான் தோற்கடித்தார்கள். அரசியல் கட்சி தலைமை என்ன செய்திருக்க வேண்டும்? இவ்வளவு விசுவாசமான, சமூக அக்கறை கொண்ட உறுப்பினராக இருக்கிறாரே? ராஜ்யசபா உறுப்பினராக அனுப்பியிருக்கலாம் அல்லவா? அந்த வாய்ப்பை தரத் தவறியதேன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.  அவரது செயல்பாடு மேலும் பலனுள்ளதாக  இருந்திருக்கும்.

அடுத்து பழ. நெடுமாறனை சொல்லவேண்டும். காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக நின்றவர்.

பழைய மதுரை மாவட்டத்தின் பலம் மிக்க காங்கிரஸ் தலைவராக இருந்தவர். மத்தியில் இந்திராகாந்தி தொடங்கி பல அரசியல் தலைவர்களோடு பழகியவர். யாருக்கும் புகழஞ்சலி சூட்டாத கர்மவீரர் காமராஜரே ஒரு முறை மேடையில் பேசும்போது ‘மாவீரன்’ என்று பழ.நெடுமாறனை அழைத்து பேசினார்.

தமிழினத்திற்கான நெடுமாறனின் களப்பணி மிகச் சாதாரண ஒன்றல்ல. பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் அவர் மீது பாய்ந்த பிறகும், சிறைச்சாலையில் வைத்த பிறகும் அவர் ஓய்ந்துவிட வில்லை. அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று ஒதுங்காமல் தொடர்ந்து போராடியபடியே இருக்கின்றார்.

ஆனால் அந்த பழ நெடுமாறனை 1980-க்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுத்துப் பார்த்திருக்கிறோமா? பலமுறை தேர்தலில் போட்டியிட்ட நெடுமாறனை மக்கள் புறக்கணித்தது ஏன்?

காங்கிரஸ் கட்சியில் தஞ்சை ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் உட்பட பழைய அரசியல் கட்சி தலைவர்களோடு செயலாற்றிய ஜனதா கட்சியில் இருந்த தக்களை முகமது இஸ்மாயில், மதுரையில் இன்றும் பல போராட்டங்களை தனித்து நடத்திக் கொண்டிருக்கின்ற பழைய ஜனதா தள ஜான் மோசஸ் என்று நீண்ட பட்டியலை கூறலாம்.  சமீபத்தில் இந்த பட்டியலில்  சேர்ந்தவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட தலைவர் சுப.உதயகுமார். இவர் ராதாபுரம் தொகுதியில் வாங்கிய வாக்குகள் 4891. இந்தியா முழுக்க பேசப்பட்ட ஒரு போராட்டத் தலைவரால் 5000 வாக்குகள் கூட பெற முடியவில்லை.

இவர்கள் எல்லாம் வாய்ப்புக் கேட்டு மக்களிடம் வந்தபோதெல்லாம் புறக்கணிக்கப்பட்ட பட்டியலைச் சேர்ந்தவர்கள். ஆனால் புறக்கணித்தது இவர்கள் வேண்டாம் என்பதாலா? இவர்கள் தவறானவர்கள் என்பதாலா? இந்திய ஜனநாயகத் தேர்தலின் ஆட்டவிதிகளுக்கு ஏற்ப தங்கள் அணுகுமுறையை அமைத்துக்கொள்ளாததால்தான் தோற்றார்கள். அவர்களுக்கே தெரியும்.

இது ஒருபுறம் இருக்க, கட்சித் தலைமைகளே புறக்கணித்த தலைவர்கள்  பட்டியல் இன்னும் நீளமானது.

ஆக நல்ல தலைவர்களை மக்கள் புறக்கணித்து வருவது ஒரு புறம் இருந்தாலும், அந்தந்த கட்சி தலைமைகளே புறக்கணிப்பதும் இருட்டடிப்பு செய்வதுமாக இருப்பதுதான் அரசியல் சூதாட்டத்தில் நடக்கும் வேதனை.

இதில் நிஜமான மக்கள் பணியில் இருக்கும் தலைவர்கள் மக்கள் தேர்தலில் புறக்கணித்தாலும் தங்கள் அரசியல் பணியை விட்டுவிடுவதில்லை. அவர்கள் தேர்தலில் தோற்போம் என்றே போட்டியிடுகிறார்கள். அவர்கள் போட்டியிடுவது தங்கள் கொள்கைகளை எடுத்துச்சொல்ல. மாற்று அரசியலின் குரலாக ஒலிக்க. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்கிறார்கள். கட்சிக்குள்ளும் வெளியிலும். மக்களுக்கு சாபம் விடுவதில்லை. அரசியலை விட்டு ஓடுகிறேன் என்று அறிக்கை விடுவது இல்லை. தமிழருவி மணியன் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று சொன்னது அவருக்குப் பொருந்தவில்லை.!

ஜூலை, 2016.